பால்வழக்கு ( Genderlect)
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை அலசும் கட்டுரை.
"ஆழம் அது ஆழம் இல்ல ஆழம் அது அய்யா இந்த பொம்பள மனசு தான்யா"
இந்த பாடல் வரிகளில் இதைப் பாடியவனின் அறியாமைதான் தெரிகிறதே ஒழிய பெண்களின் மனம் மிக மிக ஆழம் என்றா தெரிகிறது.
ஆணும் பெண்ணும் ஒரே தோற்றத்தில் இருக்கிற இரண்டு வேற்று கிரக வாசிகள் என்று ஒரு புத்தகம் அதிசயிக்கிறது. இரண்டு பிரிவினருக்கும் இடையில் விதிமுறைகள் ( rules) வெவ்வேறானவை. பொதுவான விதிகள் இருந்தாலும் இருவருக்கும் தனியான வழிமுறைகள் இருக்கின்றன. ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் கூட மொழிவேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த கட்டுரை ஒட்டுமொத்த ஆண்களுக்கும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் பால் ரீதியிலான வேறுபாடுகளை அலசுகிறது.
மனித இனம் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வேலை வேலை என்று கண்களை விற்று சித்திரத்தை வாங்கிக்கொண்டிருக்கிறது . பழைய விதிகள் பெரிசுகளின் திண்ணை பேச்சாகவும் புரந்தள்ளபட்டிருக்கிறது. யூஸ் அண்ட் த்ரோ உலகில் உறவுகளை கூட யூஸ் அண்ட் த்ரோ வாக நினைத்து, சேர்ந்து வாழ்வோம் ஒத்துவரவில்லையா இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வோம் என்ற மேலைக்கலாசாரத்திற்கு அடிமையாகி திரிகிறார்கள இன்றைய இளைஞர்கள். விவாகரத்து வழக்குகள் இந்தியாவில் ஏறுமுகமாக இருக்கிறது அதற்கு காரணம் புரிந்து கொள்ளாமை. "பாஸ்ட் பூட்" கலாச்சாரத்தில் கலை நயத்தோடு சமையல் செய்து அதை ரசித்து உண்பதற்கு எங்கே நேரம்.
இந்த பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டுகள் போக நம்மை அறியாமலே வாலும் ( சில சமயம் நுனியில் அம்புக்குறியோடு !) கொழுப்பும், லொள்ளும் மரபு அணுக்கள் வாயிலாக நமக்கு உள்ளுக்குள்ளே இருந்து நம்மை இயக்குகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான படிப்பினை.
ஆணும் பெண்ணும் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக வேறுபட்டவர்கள் என்பது காலம் காலமாக எல்லோரும் அறிந்த உண்மை . யார் யாரை விட சிறந்தவர் எனகின்ற பட்டிமன்றங்கள் தலைமுறை தலைமுறைகளாக பல சாலமன் பாப்பையாக்கள் விடை கண்டுபிடிக்கமுடியாமல் "மீண்டும் வரும்" போட்ட மெகா தொடர்மாதிரி நீண்டுகொண்டே இருக்கின்ற சமாச்சாரமும் மிகப்பழையது என்பதும் உண்மையே. அவர்கள் பேசுகின்ற மொழிகள் மிக கவனமாக கவனிக்கப்படவேண்டிய அறிவியல். பேசுகின்ற வார்த்தைகளை விட உடல் கூறும் மொழிகளால் புரிந்துகொள்ளப்பட்டு அவை தொனிக்கின்ற அர்த்தங்கல் வேறு வேறு ஆனவை என்கின்ற அறிவியல் புதியது.
ஒரு நாள் என் மனைவி என்னிடம் " இந்த வாரம் சனிக்கிழமை உடல்நலம் பரிசோதனை செய்ய லேப் க்கு போகலாமா ? " என்று கேட்டாள். என் மனத்துக்குள் ஒரு சின்ன பொறி ( அம்புக்குறியிட்ட வால் ! ), இது ஒரு மேலோட்டமான நேரிடையான கேள்வியல்ல இதற்குப்பின்னால் ஏதோ அர்த்தம் இருக்கிறது. உடனே நான் கேட்டேன். " நீ கேட்கிறாயா இல்லை சொல்கிறாயா?" ( "கேட்பது" என்பது லேப் க்கு செல்ல எனக்கும் சம்மதமா என்று கேட்பது. "சொல்வது" லேப் க்கு போகிறோம் என்கின்ற முடிவை அறிவிப்பது).
என்னுடைய கேள்வியைப் ஏளனமான பார்வையோடு பார்த்துவிட்டு இது என்ன அசட்டுத்தனமான கேள்வி? நான் போகவேண்டும் என்று தான் சொன்னேனே (!!!)
அட என் பதினைந்து வருட கால தாம்பத்திய வாழ்க்கையில் என்னிடம் இப்படித்தான் உரையாடினாயா என் தர்ம பத்தினியே என்றபோது அவள் "ஆமாம்" என்றது சொடேல் என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல இருந்தது. அதுதான் இந்த கட்டுரை பிறந்ததுக்கு மூல காரணம்.
வெவ்வேறு பகுதிகளில் பேசுகின்ற மொழிவழக்கினை " வட்டார வழக்கு" என்று சொல்கிறோம். உதாரணமாக நாகர் கோயில் தமிழ், மதுரை தமிழ் ( வர்ராங்கே) , கோவை தமிழ் ( ஏனுங்கோ ), சென்னை தமிழ் ( இன்னா - நாற்பது (!)). சில குடும்பங்களில் பேசுகின்ற மொழிகள் கூட வட்டார வழக்கில் சேர்த்திதான் உதா: வென்னித்தண்ணி, ஜலம், ஆத்துக்கு போலாம் போன்றவை.
இதே போன்று இரண்டு பாலரும் பேசுகின்ற பேச்சு வழக்கைக் குறிக்க இதுவரை தமிழில் வார்த்தை இல்லை என்றே கருதுகிறேன். (இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்). இதை ஆங்கிலத்தில் "Genderlect" என்று டெபோரா தனன் என்ற சமூக அறிவியலாளர் ஆராய்ச்சி செய்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார். இதற்க்கு நிகராக நாம் தமிழில் 'பால்வழக்கு' என்று அழைக்கலாம்.
மொழி என்கின்ற பூட்டுக்கு சொல்லப்பட்டது என்ன என்பதைவிட புரிந்துகொள்ளப்பட்டது என்ன என்பதில்தான் சாவி இருக்கிறது.
" நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு புரிஞ்சுக்காதே'
" நான் சொல்றதை புரிஞ்சுக்கவே மாட்டிங்கறியே"
" தயவுசெஞ்சு என்னை புரிஞ்சுக்கோ"
இவை நம் வாழ்வில் பழகிப்போன வாக்கியங்கள்தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் இந்த வார்த்தை விளையாட்டு ரொம்ப ஆழமானது. சில தில்லாலங்கடிகள் ஆரம்ப காலத்திலேயே இந்த முடிச்சை அவிழ்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள முயற்சி எடுப்பார்கள். மற்றையோர் தொழுதுண்டு பின் செல்பவராவார் ( நீ என்ன சொன்னாலும் கரக்ட்மா- டைப் ) இந்த பிரச்சினைக்கு முடிவே கிடையாதா? இந்த முடிச்சை அவிழ்க்க உத்தியே இல்லையா? இருக்கிறது. மேலே படியுங்கள்.
பரிணாம வளர்ச்சியில் பல லட்சம் வருடங்களாய் மனித இனம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. நவீன மனிதன் தோன்றி சுமார் ஒரு லட்சம் வருடங்கள் ஆகின்றது என்று மானுடவியலாளர்கள் (Anthropologists) சொல்கிறார்கள். இந்த ஒரு லட்சத்தில் முதல் பாதியைக் ( வெறும் குரங்காக மட்டுமே இருந்ததால் பெரிதாகப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை) கழித்து விட்டு அறிவு சேகரத்தின் ஆரம்ப காலங்களான மீதி இருக்கும் இரண்டாவது பாதி ஐம்பதாயிரம் ஆண்டுகளை எண்ணூறு சந்ததிகளாகப் பிரித்தால் முதல் 650 சந்ததிகள் குகைகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த 70 வருடங்களாகத்தான் மொழிகள் பிறந்திருக்கின்றன. கடந்த இரண்டு சந்ததிகள் தான் மின்சார மோட்டார் பார்த்திருக்கிறார்கள். மனித இனம் குரங்கில் இருந்து மனிதனாய் வாழத்தொடங்கி பல நாகரீகங்களைக் கடந்து அறிவைத் தேடிப் பெற்று அதை தன் சந்ததிகளுக்கும் தொடர்ந்து கடத்துகின்ற ஆற்றலை பெற்றதும் வெகு சில காலங்களாகத்தான். இன்று இருக்கிற எல்லா கண்டுபிடிப்புகளும் ( பௌண்டன் பேனா முதல் ராக்கெட் வரை மற்றும் வெஸ்டன் டாய்லட்டில் இருந்து போஸ்ட் இட் பேட் வரை எல்லாமே) நாம் வாழும் சந்ததியை சேர்த்த இந்த இரண்டு சந்ததிகளுக்குள் பிறந்த அவசரக்குழந்தைகள்தான்.
ஆனாலும் ஒற்றை செல் உயிரினமாய் இருந்த காலம்தொட்டு இன்று வரை நமது பசி, தூக்கம், கழிவு வெளியேற்றம், பாலுணர்வு போன்ற செய்கைகள் எல்லாம் அன்று மாதிரியே நிலைத்து இருக்கிறது. ( சுவரில் மாணவர்கள் தங்களது பெயர்களை நீரடித்து வரைவது நீண்டகாலப் பழக்கமாக இருக்கலாம்)
நம்மிடம் இருக்கும் உடல் உறுப்புகளில் 98.5 சதவிகிதம் பன்றியிலும், 99.5 % க்கு மேல் சிம்பன்சி குரங்கிடமும இருக்கிறது இதில் ஒரே வித்தியாசம் சிந்திக்கும் திறன்தான். அந்த சிந்திக்கும் திறம் பிறந்தது பரிணாம காலச்சுவட்டில் வெகு அருகாமையில் தான். அதனாலேயே நாம் பல நாகரீக சமாசாரங்களை வலிந்து கஷ்டப்பட்டு பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.
நம் எண்ணங்களை தூண்டும் சுரப்பிகளை நாம் கையாளும் விதம் மாறியிருக்கிறது ஆனால் சுரப்பிகளின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தான் ஒவ்வொருவருடைய பழக்க வழக்கமும் மற்றவரைவிட வித்தியாசமாய் இருக்கிறது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை மனிதன் குழுக்களாக குகைகளுக்குள் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். ஆணுக்கு மிக முக்கிய வேலை காட்டுக்குள் சென்று மிருகங்களை வேட்டையாடி வழிதப்பாமல் வீட்டுக்கு ( குகைக்கு) திரும்ப வேண்டும். பெண் தங்கள் குழுக்களை மிருகங்களிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும். குழந்தைகளின் குறிப்பறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதில் அவள் கவனம் கொண்டிருந்தாள். இந்த வாழ்க்கை முறை மிக நீண்ட காலமாக தொடர்து வந்தது. மனித சரித்திரத்தில் 95 சதவிகிதம் இந்த வாழ்வு பின்னணியில்தான் கழிகிறது. எனவே ஆண்களுக்கு இந்த வாழ்வு முறைக்கு அவசியமான வேகம், உடல்திறன், தூரம் கணித்தல், வழி கண்டு பிடித்தல், எதிராளி தன்னை விட பலம் குன்றி இருந்தால் வீழ்த்துதல் பலம் கூடி இருந்தால் ஓடி தப்பித்தல் போன்ற தனித்திறமைகளை மிகக்க் கூர்மை படுத்திக்கொண்டே வந்திருக்கிறான். அதே சமயம் பெண் முக பாவங்களை வைத்து தேவைகளை கணித்தல் அழுகையின் தன்மையை வைத்து குழந்தைக்கு என்ன பிரச்னை, பூச்சிக்கடியா , பசியா என்று உணர்தல், வீட்டுக்கு வரும் நபர் நம்பகமானவரா ( அவன் பார்வையே சரியில்ல ) , சம்பாஷணையை வைத்து உணர்வுகளை ( ஆபிசில் எதாவது பிரச்னையா?) கணித்தல் ஆகிய குணாதியங்களை கூர்மைப் படுத்தி வந்திருக்கிறார்கள்.
இவ்வாறு மிக கவனமாக சேமித்து வந்த அறிவை பயன்படுத்தும் விதம் வெகுவாக மாறவில்லை. ஒரு ஆண் தான் ஒரு முறை சென்று வந்த பாதையில் செல்லும்போது வேறொருவரிடம் வழி கேட்பதை கேவலமாக நினைப்பான். பத்து முறை சுத்தி சுத்தி வந்தாலும் இங்கேதானே அந்த பாதை எனக்கு நன்றாக தெரியுமே என்று தனது இடம் சார்ந்த அறிவில் ( spacial ability) மூர்க்கத்தனமான நம்பிக்கை கொண்டிருப்பான். அவனுக்கு 50 கி.மீ தவாறான பாதையில் செல்வது மற்றவரிடம் வழி கேட்பதை விட இழிவான செயல் அல்ல.
ஒரு ஆணுக்கு உரையாடல் என்பது தன தகுதியை நிர்ணயிக்கிற குத்துச்சண்டை களம். உதா:
ஒருவன் :- அடியே எங்கப்பாகிட்ட ரெண்டு கார் இருக்கு தெரியுமா?
இன்னொருவன் :- போடா எங்க மாமா வீட்ல நாலு கார் இருக்கு தெரிஞ்சுக்கோ?
ஒருவன் : - எங்க கார் 130 கி. மீ வேகத்தில குலுங்காம போகுமாக்கும்
இன்னொருவன் :- அது என்ன பெரிசு எங்க கார் 160 கி.மீ வேகத்தில்கூட வளைஞ்சு போகும்
ஆனால் பெண்ணுக்கு உரையாடல் என்பது உறவு வளர்க்கும் ஒரு தொடர்பு சாதனம்
ஒருத்தி :- எங்கப்பா எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி தந்தாரே
இன்னொருத்தி :- ஏய் எனக்கும் கொண்டாந்து காமிப்பா
இந்த மாதிரியான உரையாடல்கள் குழந்தை பருவத்தில் இருந்து மரபு ரீதியாக பின்னப்பட்டு சமூக ரீதியாக வெளிப்படுகிறது. இவற்றை சிறுவர்கள் மத்தியில் கவனிக்க முடியும். நமது சொந்த உரையாடலை நாம் பெறும்போதும் இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பதில்லை.
ஒரு ஆண் தன்னுடைய ஆளுமையை உறிதி செய்வதற்க்காக ஏதாவது ஒரு வகையில் தனது மேதாவித்தனத்தை காண்பித்துக்க்கொண்டே இருப்பான். அது உரையாடலாக இருக்கலாம் அல்லது பொது அறிவாக இருக்கலாம். ஆணுக்கு பிடிக்காத கசப்பான விஷியங்களில் ஒன்று கீழ்நிலைமை ( subordination).
காட்டுக்குள் வேட்டைக்கு செல்லும்போது எல்லாச் சூழ்நிலைகளையும் தான் கட்டுப்படுத்தியாக வேண்டியது மிக முக்கிய தகுதி ஆகும். பல சமயங்களில் அது வாழ்வா சாவா முடிவுக்கு தேவையான தகுதியாகும். அந்த தகுதிதான் தனது மிகப்பெரிய பலம் என்று ஏற்றுக்கொண்டு அதை இன்றளவும் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தி வருகிறது ஆணினம்.
நம் கட்டுரை பால்வழக்கு என்ற மொழிசம்பதப்பட்டது என்பதால் நாம் வாழ்க்கை முறைகளை அதிகம் அலச வேண்டியதில்லை.
மேற்சொன்ன தகுதி அடிப்படைகள் மொழி பரிமாற்றத்தில் எவாறு ஆதிக்கம் செலுத்துகின்றன, பேசுகின்ற பாவனைகள், பொருள் கொள்ளுதல் போன்றவற்றில் எத்தகைய மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பது தான் நமது கட்டுரை களம்.
ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் தனித்தனியாக விளையாடும்போது அவர்களது பேச்சுக்களை உன்னித்து கவனித்தால் நமது வார்த்தை விளையாட்டுக்கள் வெறும் கலாச்சாரத்தின் தாக்கத்தினால் மட்டும் பிறபபதன்று அவை மரபு ரீதியான வெளிப்பாடுகள் என்பவை விளங்கும் .
உடலியல் சமாச்சாரங்களும் ( புறத்தோற்றம் தவிர இன்ன பிற ) இந்த குழப்பத்தை மேலும் கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக ஆணின் மூளை செயல்பாட்டு விஷயத்தில் தனி தனிப் பெட்டிகளை போன்ற அடுக்குமாடிக்கட்டிடம் போன்ற அமைப்பைக்கொண்டது. குடும்பத்துக்கு ஒன்று, வேலைக்கு ஒன்று, காருக்கு ஒன்று, பணத்துக்கு ஒன்று, செல்ல நாய்க்குட்டிக்கு ஒன்று, அம்மாவுக்கு( கீழ்மட்டத்தில்) ஒன்று, மனைவிக்கு ( மேல்மாடியில்) ஒன்று என்று பல பெட்டிகளை கொண்டது. ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும் போது வேறு விஷயம் உள்ளே நுழையமுடியாது. அந்த பெட்டியை மட்டும் வெளியே எடுத்து பேசிவிட்டு எந்த பெட்டியிலும் பட்டுவிடாமல் பத்திரமாய் உள்ளே வைத்து விட்டு அடுத்த பெட்டியை எடுக்க வேண்டும். ஒரு உரையாடலில் இருந்து இன்னொரு உரையாடலுக்கு டக் டக் என்று ஆணால் தாவ முடியாது ( உதாரணம் : நாம இத முடிச்சுட்டு அடுத்தத பேசலாமா? நாம பேச்ச எங்கே விட்டோம்?)
ஆனால் பெண்ணின் மூளை ஒரு வலைப்பின்னல் போன்றது எல்லா சமாச்சாரங்களும் எல்லா சமாசாரங்களோடும் தொடர்பு கொண்டிருக்கும், ஒரு உரையாடலில் இருந்து இன்னொரு உரையாடலுக்கு மிக சுலபமாய் பயணித்து விட்டு திரும்பவும் வந்து விட்ட இடத்தில இருந்து தொடர்ந்து விட முடியும்.
இடப்புற மூளையின் செயல்பாடு வலப்புற மூளையின் செயல்பாட்டில் இருந்து வேறுபட்டது. இடப்புற மூளை கணக்கு , லாஜிக், ஆராய்ச்சி, ஒரு பாடலின் வார்த்தைகளை மனப்பாடம் செய்வது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. வலப்புற மூளை கிரியேடிவ் சமாசாரம் படங்களை ரசிப்பது, ஒரு பாட்டின் டியூனை பிடித்துக்கொள்வது, மற்றும் கற்பனைக்குதிரை கடிவாளம் இல்லாமல் பறக்கும் பகுதி.
இது பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும் விதியாக இருந்தாலும் நம் கட்டுரையில் சில சிறப்புக்கூறுகள் இருக்கின்றன. ஒரு ஆணின் மூளை இடப்புறத்தில் அடிபட்டால் அவன் பேச்சுதிறமை இழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன அல்லது எந்த பகுதி அடிபடுகிறதோ அந்த பகுதி கட்டுபடுத்தும் செயல்பாட்டினை இழந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது ( பெநிசில்வேனியா பல்கலைக்கழக ஆய்வு) அனால் பெண்ணுக்கு அப்படி இல்லை. மூளையின் மற்ற பகுதிகளில் ஏதோ ஒன்று அந்த செயல்பாட்டினை எடுத்துக்கொள்ளும் திறன் படைத்தது.
கண்களின் சக்தி இன்னொரு சிறந்த உதாரணம் ஆகும். ஆண்களின் கண்கள் மிக தூரத்தில் இருந்து வருகின்ற வாகனங்களை கணிப்பதற்கும் துல்லியமாக தூரத்தை சொல்வதற்கும் பயன் படுகிறது. ஏனென்றால் வேட்டையாடுவதற்கு இந்த தகுதி மிகத்தேவையானது. ஆனால் அலமாரிக்குள் வைத்திருக்கும் ஜட்டியை கண்டுபிடிப்பதற்குள் வீட்டில் ஒரு பெரிய பிரளயம் கிளம்பிவிடும். அவள் சாதாரணமாக வந்து ஒரு மந்திரவாதியை ப்போல டக் கென்று எடுத்துக்க் கொடுப்பாள். பிரிட்ஜ் க்கு முன்னால் நின்று கொண்டு பட்டர் காணோம் என்று அவன் கத்த " அங்கதான் இருக்கு " என்று அவள் வந்து எடுத்துக்கொடுப்பாள். என்ன ' Butter' தலைகீழாக வைக்கப்பட்டிருக்கும் அவ்வளவுதான். நூலகத்தில் ஆண்களை பாருங்கள் தலயை சைத்துத்தான் புத்தகத்தின் தலைப்பை அவனால் வாசிக்கமுடியும்.
பெண்களின் கண்கள் அகலப்பார்வை கண்கள். தலையை திருப்பாமலே சைடில் செல்லும் ஆள் கருப்ப சிவப்பா, என்ன சட்டை மாட்சிங் கால்ச்சட்டையா இல்லையா என்று கணிப்பார்கள். தூரத்தில் கணவனின் சட்டையில் ஒட்டியிருக்கும் நீள தலைமுடியை "C I D " செய்யும் அவளுக்கு தன் காருக்கு முன்னால் செல்லும் வண்டியோ அல்லது பின்னால் எடுக்கும்போது இருக்கும் தூணோ தெரிவதில்லை. ( பெண்களின் கார் ஓட்டும் திறமையை அறிய " வெப்சைட்'" பார்க்கவும்.)
மன அழுத்தத்தை ஆளுமை செய்வதற்கு ஆணின் உடலும் பெண்ணின் உடலும் வெவ்வேறு சுரப்பிகளை பயன்படுத்துகின்றன ( ஆண் - testosterone, பெண் : oxytocin ).
தகவல் பரிமாற்றம் என்பது பேசுகின்ற வார்த்தைகளால் மட்டும் நடப்பதன்று. நமது குரல், தொனி, ஏற்ற இறக்கம், நம் கை தலை அசைவுகள், கண்ஜாடை போன்ற உடலசைவு மொழிகள் ( Body Language) மூலம் நாம் அடுத்தவரை புரிந்து கொள்ள வைப்பது தான் முழுமையான தகவல் பரிமாற்றம். தொலை பேசியாக இருந்தால் குரலை வைத்து ஒருவர் சிரிக்கிறாரா கோபமாக இருக்கிறாரா என்று கண்டுபிடித்து விடலாம்.
ஒரு ஆண் ஒரு நாளைக்கு சராசரியாக 7000 த்தில் இருந்து 9000 வரை வார்த்தைகள்( சொற்கள், சமிக்ஜைகள், தலையசைவுகள், கையசைவுகள் எல்லாம் சேர்த்து ), பயன் படுத்துகிறான்.
பெண்களுக்கு உடலசைவு மொழிகள் மூலம் பேசிக்கொள்வது மிக இயல்பான காரியம் ( காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் காதலனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்). மேற்ச்சொன்ன ஆணுக்கு நிகரான சராசரியாக பேசும் வார்த்தைகள் எவ்வளவு தெரியுமா? 22,000 முதல் 25,000 வரை முகபாவனைகள், கண்ணசைவு, புருவம் உயர்த்துதல், இமை சொடுக்குதல், ஓரக்கண் பார்வைகள் முடியாயைக்கோதுதல், தலை முடியை பின்னியிருக்கும் ரப்பர் பேண்டை பிரித்து பிரித்து ( காரணமே இல்லாமல்) மாட்டுதல் போன்ற எல்லாம் சேர்த்து இவ்வளவு. இப்போது சொல்லுங்கள் 9000 எங்கே 25000 எங்கே. புரிந்து கொள்ளாமை வருமா வராதா?
இவையெல்லாம் போக ஒரு பிரத்தியேகமான உரையாடல் உத்தியை பெண்கள் கடைபிடிக்கிறார்கள்.
ஒரு முறை என் நண்பரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தோம் அங்கே நடந்த உரையாடல் இதோ.
குழந்தைகள் எல்லோரும் உணவருந்தியபின் நானும் சேகரும் அமர்கிறோம்
சேகர் : பிரியா நீ சாப்பிட்டுவிட்டாயா ?
பிரியா : ம் ம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டார்கள்
சேகர் : நீ சாப்பிட்டியா?
பிரியா : ம் . ம் அதான் சொன்னேனே
சேகர் : ஓகே
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு முடிவு பெற்ற சம்பாஷணையாக தோன்றும். இது எல்லோர் வீட்டிலும் சாதாரணமாக நடக்கக்கூடிய உரையாடல்தான். ஆனால் இது முடிவு பெறாத சம்பாஷனை என்பதுதான் இந்த கட்டுரையின் ஹைலைட்.
நான் : சேகர் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா ?
சேகர் : ம் ம் கிடைத்து விட்டதே.
நான் : பிரியா இன்னும் சாப்பிடவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
சேகர் : ங்கே என்று விழிக்கிறார் (வாயில் இருந்த இட்லி கீழே விழுந்தது)
நான் ப்ரியாவிடம் : பிரியா நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை கரெக்டா
பிரியா: அட ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் ?
இது ஒரு சாதாரண உரையாடல் யர்ருக்கும் பிரச்னை இல்லாத உரையாடல். இதுவே ஒரு பிரச்சினைக்குரிய சம்பாஷணையாக நினைத்து பாருங்கள் இந்த புரிந்து கொள்ளாமை எங்கே கொண்டு போய் விடும்.
பல விஷயங்களை நேரிடையாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல் பெண்களின் பலம் அதை எப்போதும் புரிந்துகொள்ளாமல் பாட்டு பாடுவது ( ஆழம் அது ஆழம் அய்யா) ஆணின் பலவீனம்.
குடும்பங்களில் கணவன் மனைவி தாய் மகன் சகோதரன் சகோதரி என்கின்ற ஆண் பெண் உறவுகளில் இந்த பால்வழக்கு பிரச்சினை இருந்தாலும் விட்டுக்கொடுத்தல் பின்வாங்குதல் போன்ற நற்செயல்களால் (!) தீர்வு இல்லாமலே கூட பிரச்சினை முடிவுக்கு வந்து விடுகிறது. ஆனால் அலுவலகத்தில் இத்தகைய சிக்கல்கள் எத்தனை சிரமங்களை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொள்வது மிக அவசியம் ஆகும்.
ஒரு ஆண் பேசும்போதும் கேட்கும் போதும் அறிக்கை வடிவிலான மொழியாடலை கடைபிடிக்கிறான். ஏனென்றால் அவனுக்கு ஒரு சமயத்தில் ஒரு வேலையைத்தான் சிறப்பாக செய்யமுடியும் ( வீட்டில் டீ வி பார்த்துக்கொண்டிருக்கும்போது போன் மணியடித்தால் ஆண் முதலில் தேடுவது ரிமோட் கண்ட்ரோல் ஆகத்தான் இருக்கும் ) அனால் பெண் ஒரே சமயத்தில் பல வேலைகளை திறம்பட செய்யும் ஆற்றல் பெற்றவள் ( காலையில் பால்காரன், பேப்பர்காரன், அழுகின்ற குழந்தைக்கு ரொட்டித்துண்டு, ஓடிக்கொண்டிருக்கும் செய்தி, விசில் அடிக்கும் குக்கர் , குளியல் அறையில் இருந்து சோப் கேட்கும் கணவன் எல்லாவற்றையும் ஒரு தவறும் செய்யாமல் சரியாக செய்பவள் பெண் ). அதனால் ஒரு விஷயத்தை பேசும்போது பல விஷயங்களை தொடர்புப்படுத்தி பெண்ணால் பேச முடியும். ஆனால் ஆணுக்கு அதற்க்கு பொறுமை இருக்காது.
பெண்ணுக்கு பேசுதல் அல்லது பிரச்சினையை பகிர்ந்து கொள்வது பிடித்த ஒன்று அது உறவு வளர்க்கும் மற்றும் நெருக்கமான உறவுக்கான பேரம். ஆனால் ஆணுக்கு பிரச்சினைகளை பகிர்தல் என்பது கட்டுப்பாடு இழக்கும் கேவலமான செயல். ஆணுக்கு எதிர் உரையாடல் ( மாற்றுக்கருத்து) ஏற்பட்டால் தனக்கு கட்டுப்பாடு இழந்தது போன்ற உணர்வு ஏற்ப்படும் ஆனால் பெண்ணுக்கு எதிர் உரையாடல் என்பது பங்களிப்பிற்கான உத்திரவாதம். ஆணுக்கு வீடு என்பது அமைதியாக இருக்கவேண்டிய சரணாலயம் அனால் பெண்ணுக்கு வீடு என்பது நினைத்ததை சொல்லமுடிகிற பாதுகாப்பான இடம்.
இப்போது சொல்லுங்கள் ஏன் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது. அடடே நமக்குதான் எல்லாம் தெரிந்து விட்டதே என்கிறீர்களா. அதுதான் இல்லை. இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.
நம்முடைய அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் மாதிரியே மேலை நாடுகளில் அறிவியல் ரீதியாக ஆராயப்பட்ட கான்செப்ட் தான் 'அனிமா' ( anima) மற்றும் 'அநிமஸ்' (animus). கார்ல் யங் என்பவர் ஆராய்ச்சி செய்து ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணும் சதவிகிதமாக கலந்து இருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டிருக்கிறார். ஒருவருக்கொருவர் சதவிகிதத்தில் வேறுபாடு இருக்கலாம் ஆனால் பெண்தன்மை இல்லாத ஆணோ ஆண் தன்மை இல்லாத பெண்ணோ இருக்கமுடியாது. இதை ஜப்பான் நாட்டில் 'yin' மற்றும் 'yan' என்று சொல்கிறார்கள்.
அனிமா என்பது பெண்மையையும் அனிமஸ் என்பது ஆண்மையையும் குறிக்கும் சொற்கள்.
அன்பு, பரிவு, காருண்யம், சுயநலம், புரிந்துகொள்ளும் இயல்பு, மென்மை - இவை நேரடி அனிமா ( positive animus)
கோபம், குறுக்குபுத்தி, செருக்கு, பணியாமை, பேய்க்குணம் இவை எதிர்மறை அனிமா ( Negative Anima).
உறுதி, நேர்மை, தெளிவு, கட்டுப்பாடு, பகுத்தறிவு, தைரியம் போன்றவை நேரடி அனிமஸ் ( Positive animus)
விட்டுக்கொடாமை, அழிக்கும் குணம், நான் என்கிற அகங்காரம், தற்பெருமை இவை எதிர்மறை அனிமஸ் ( Negative animus).
வேகமாக மாறிக்கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் முக்கியமான குழப்பம் ஒன்றை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.
பெண்கள் ஆண்களைப்போல் நடை, உடை, பாவனை, பழக்கங்கள், இயல்புகள், வேகம், விவேகம், உத்வேகம், தொழில், என்று பல பரிமாணங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அது சமூக அங்கீகாரத்தையும் பலசமயங்களில் வெகுஜன பாராட்டுதலையும் பெற்றுக்கொடுக்கிறது ( பெண் போலிஸ், பெண் விமானி, பெண் ஆட்டோ ஓட்டுனர், பெண் லாரி ஓட்டுனர்).
ஆனால் ஒரு ஆண் தன்னுடைய பெண்ணியல்புகளை மறைக்கவேண்டிய சமூக சிக்கலில் இருக்கிறான். பெண்ணைப்போல் பேசவோ , பழகவோ, மென்மைத்தனமாகவோ அவன் இருந்தால் அது அவனது பலவீனமாக கருதப்படுகிறது. இந்த மாதிரியான செயல்பாட்டிற்காக பிரத்தியேகமான வார்த்தைகளால் அவன் கிண்டல்/ கேலிக்கு உள்ளாகிறான். அதனால் அவன் தன்னை மிக வருத்திக்கொண்டு ஒரு ஆண்மகனாய் வலம் வர வேண்டியுள்ளது.
இதில் இரு பாலரும் உணர்ந்து கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் என்ன?
இருவர் வழக்கும் சரியே, இருபாலரின் மொழிநடையை மாற்றிக்கொள்ள எதிர்பார்ப்பது நியாயமல்ல. ஒருவருக்கொருவர் தங்களின் குணநலன்களின் சாதக பாதகங்களை உணர்ந்து அடுத்தவர்க்கு மரியாதை கொடுப்பது என்று முடிவெடுத்தால் 'பால்வழக்கு' பயனளிக்கும்.
ஒரு சிலர் என்னிடம் கேட்டார்கள் உங்களுக்கு பால்வழக்கு தெரிந்தபின் உங்கள் மனைவியோடு மிக இணக்கம் வந்துவிட்டதா ? உங்களுக்குள் சண்டையே வருவதில்லையா ? அவர்களுக்கு என் பதில் ஆம் என்பதுதான் முன்னைக்கு எங்களுக்குள் புரிதல் இப்போது பரவாயில்லை. என்னால் அலமாரிக்குள் இருக்கும் உள்ளாடைகளை கண்டுபிடிக்கமுடியாது என் கண்களுக்கு அந்த சக்தி இல்லை என்பதை அவளும், அவளுக்குத் தெரிந்த ஒரு இடத்துக்கு செல்லும்போது அவளிடம் வழி கேட்டால் அவள் வலதுபுறம் சைகை காட்டி இடப்புறம் திரும்பு என்று சொன்னால் அதை பொறுமையாக "என் கண்மணி நீ காட்டுவது வலப்புறம்" என்று பொறுமையாக சொல்லும் அறிவோடு மட்டுமல்லாமல் எங்களுடைய இயலாமைகளை இருவரும் ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் கூடியிருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி தானே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment